தமிழ்நாடு முதல்வரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் தருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் புலம்பல்

முதல்வரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் தருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் புலம்பல்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

ஆக.15, 2015:- சுதந்திர தினமான நேற்று, சென்னை கோட்டையில், தேசியக் கொடிஏற்றி வைத்துப் பேசிய, முதல்வர் ஜெயலலிதா, மதுவிலக்கு தொடர்பாக, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதையடுத்து, பெரிதாக வெடிக்கும் என்ற நினைப்பில், எதிர்க்கட்சித் தலைவர்கள், 'கொளுத்திப் போட்ட' மதுவிலக்கு பட்டாசு, 'புஸ்'சென்றாகி விட்டது. முதல்வரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக, இப்போது, அந்தத் தலைவர்கள் புலம்பத் துவங்கி உள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக, மதுவுக்கு எதிராக, பலவிதங்களில் போராட்டம் நடத்திய கட்சித் தலைவர்கள், அரசின் நிலைப்பாடு குறித்து அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்து, நேற்று அறிக்கை வெளியிட்டனர்.

விஜயகாந்த் ,தே.மு.தி.க., தலைவர்:ஒரு மாதமாக இளைஞர், மாணவர், பெண்கள், சமூக ஆர்வலர், மாற்றுத் திறனாளிகள், அரசியல் இயக்கங்கள் என, ஒட்டுமொத்த தமிழகமே, மதுவுக்கு எதிராக போராடின. ஆனால், எதுவுமே நடக்காதது போல, மக்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போன்று, ஜெயலலிதா, சுதந்திர தின உரையாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது.

இளங்கோவன்,தமிழக காங்கிரஸ் தலைவர்:ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில், மதுவிலக்கு உள்ளிட்ட எந்த முக்கிய அறிவிப்புகளும் இல்லை. இதன் பின்னும் அமைதியாக இருக்க முடியாது. மதுவிலக்கு பிரச்னையில், போராட்டத்தை தீவிரப்படுத்துவதை தவிர, வேறு வழியில்லை.

வாசன்,த.மா.கா., தலைவர்:தமிழக அரசு, சுதந்திர நாளில், மதுவிலக்கு அறிவிப்பு வெளியிடும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருந்தனர். எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றதும், அனைவரும் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறைந்தபட்சம், 'படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும்' என்ற அறிவிப்பாவது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பும், பொய்த்துப் போய்விட்டது.

ராமதாஸ்,பா.ம.க., நிறுவனர்:மது குடிப்பதால் ஆண்டுக்கு, இரண்டு லட்சம் பேர் உயிரிழந்தாலும் பரவாயில்லை; அதன் மூலம் அரசுக்கு கிடைக்கும், 26 ஆயிரம் கோடி ரூபாய் வருமானமும், 'மிடாஸ்' நிறுவனத்திற்கு கிடைக்கும், பல்லாயிரம் கோடி ரூபாய் லாபமும் தான் முக்கியம் என்பதை, ஜெயலலிதா, சொல்லாமல் சொல்லி விட்டார். மதுவுக்கு ஆதரவான தமிழக
அரசின் நிலைப்பாடு, கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழிசை சவுந்தரராஜன்,தமிழக பா.ஜ., தலைவர்:தமிழகத்தில் மதுவினால், 60 சதவீத மக்கள், நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தின் தன்மை உணர்ந்து, மக்களின் கருத்தையும், மனதில் வைத்து, முதல்வர் மதுவிலக்கு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாதது, வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு, அந்த தலைவர்கள் புலம்பி உள்ளனர்.

சட்டசபையை முடக்க திட்டம்:


மதுவிலக்கு விவகாரத்தில், அரசின் நிலைபாட்டால் அதிர்ச்சி அடைந்துள்ள எதிர்க்கட்சிகள், சட்டசபையில் பிரச்னையை கிளப்பவும், மற்ற அலுவல்களை முடக்கவும் திட்டமிட்டுள்ளன.சட்டசபையில் இணைந்து செயல்படுவது குறித்து, தி.மு.க., - காங்கிரஸ், - தே.மு.தி.க., போன்ற கட்சிகள் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. மதுவிலக்கு கேட்டு, தனித்தனியாக போராடிய கட்சிகள் எல்லாம், தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி, தங்கள் பார்வையை திருப்பி உள்ளன. போராட்டத்திற்கான அடுத்த களமாக, சட்டசபை கூட்டத் தொடரை பயன்படுத்த முடிவு செய்துள்ளன. அங்கேயும் இந்த கட்சிகள் இணைந்து செயல்படுமா அல்லது தனித்தனியாக ஆவர்த்தனம் செய்யுமா என்பது தான் இப்போதைய கேள்வி.

- நிருபர் -

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்