கோவையில் 115 மதுக்கடைகள் குறைய வாய்ப்பு?
ஆக.15, 2015:- சுதந்திர தினத்தை முன்னிட்டு, மதுக்கடைகளை குறைத்து தமிழக அரசு இன்று வெளியிடவுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் மட்டும் 115 மதுக்கடைகள் மூடப்படு
மென்று டாஸ்மாக் வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது.
தமிழகத்தில் மது விலக்குக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. இதன் எதிரொலியாக, சுதந்திர தினத்தன்று மது விலக்கு அறிவி்ப்பை முதல்வர் ஜெ., வெளியிடுவாரென்று, கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், முதற்கட்டமாக, மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கும் அறிவிப்பை முதல்வர் வெளியிடுவாரென்று தகவல் பரவியுள்ளது. இதற்கேற்ப, 8 விஷயங்களைப் பட்டியலிட்டு, அந்த பட்டியலுக்குட்பட்ட கடைகளைக் கணக்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
விதிகளை மீறி, கோவில், பள்ளிகளுக்கு அருகில் இருப்பவை, ஐகோர்ட் உத்தரவின்படி,
அகற்றப்பட வேண்டியவை, மாநகராட்சி எல்லையில் 50 மீட்டர் இடைவெளியில் 75 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக விற்பனையாகும் கடைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 100 மீட்டர் இடைவெளியில் 50 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக விற்பனையாகும் கடைகள், கிராம ஊராட்சிப் பகுதிகளில், 5 கி.மீ., சுற்றளவுக்குள் 30 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக விற்பனையாகும் கடைகள், கட்டிட உரிமையாளர்களால் காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்ட கடைகள், மக்கள் எதிர்ப்புக்குள்ளான கடைகள், மருத்துவமனை மற்றும் பஸ் ஸ்டாப்களிலிருந்து 50 மீட்டர் துாரத்துக்குள் உள்ள கடைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையிலான கடைகள், மோசமான கட்டிடங்களில் இயங்கும் கடைகள் என 8 விதமான மதுக்கடைகளின் பட்டியலைத் தருமாறு டாஸ்மாக் அதிகாரிகளிடம் அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்த பட்டியல் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பாக, 'பதட்டம் நிறைந்த பகுதிகளில் உள்ள கடைகள்' எது என்பதையும் இணைத்துத் தருமாறு, மற்றொரு சுற்றறிக்கை வந்துள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள், எண்களுடன் பட்டியலிடப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள 314 மதுக்கடைகளில் தெற்கு மற்றும் வடக்கு டாஸ்மாக் மாவட்டங்களில் மொத்தம் 115 மதுக்கடைகள், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த கடைகள் அனைத்தையும் மூடுவதற்கு, இன்று முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரென்று எதிர்பார்க்கப்படுகிறது.