டாஸ்மாக் நேரத்தை குறைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு
![படம்](http://tamilandam.com/img/common/defaultphotos/seithikal.jpg)
ஆக.12, 2015:- அரசு மதுபான கடையின் விற்பனை நேரத்தைக் குறைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”தமிழகத்தில் மட்டும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானங்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. பிற மாநிலங்களை போல மதுவிற்பனை செய்யும் நேரத்தை குறைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அதாவது, மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்யவேண்டும் என்று இந்த உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
21 வயதிற்குட்பட்டவர்களுக்கு விற்கலாமா?
இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், பாடம் நாராயணன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், டாஸ்மாக் விதிகளின் படி, 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இந்த விதிகளை டாஸ்மாக் நிறுவனம் பின்பற்றுவதில்லை.
எனவே, 21 வயதுக்கு குறைவானர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று டாஸ்மாக் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டனர்.