போராட்டக் களத்திலேயே சசிபெருமாள் உயிர்ப்பலி
ஜூலை.31, 2015:- காந்தியவாதியான சசி பெருமாள் செல்போன் டவரில் 5 மணிநேரம் போராடியுள்ளார். அப்படி இருக்கையில், அவரது உயிரை தமிழக அரசு ஏன் காப்பாற்ற முன்வரவில்லை என தமிழக அரசுக்கு திமுக பொருளார் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் மதுவிலக்கை அமுதல்படுத்த வேண்டும் என்று சசிபெருமாள் போராடி கடந்த சில வருடமாக தீவிரமாக போராடி வருகின்றார். அவரது போராட்டத்தின் ஒரு பகுதியாக, கன்னியாகுமரியில் செல்போன் டவரில் ஏறி சசி பெருமாள் 5 மணிநேரமாக போராடி உள்ளார். அதுவரை காவல்துறைக்கு எப்படி தெரியாமல் போகும்? அவரது உயிரை காப்பாற்ற ஏன் முயற்சி செய்யவில்லை?
மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று திமுக அறிவித்த போது சசிபெருமாள் என்னையும், தலைவர் கருணாநிதியையும் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, நான், அவரிடம், தலைவர் கருணாநிதி சொன்னதை நிறைவேற்றுவார் என்று உறுதி கூறினேன்.
காந்தியவாதியான சசிபெருமாள் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை தமிழக அரசு நடத்த வேண்டும். விசாரணையில் கிடைக்கும் தகவலையும், உண்மை சம்பவத்தையும் தமிழ மக்களுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வரும் போது மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்.
திருமாவளவன் கோரிக்கை:
காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள் மதுவிலக்குக் கொள்கைக்காக இன்று உயிர்ப்பலியாகி உள்ளார். அவருக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள் மதுவிலக்குக் கொள்கைக்காக இன்று உயிர்ப்பலியாகியிருக்கிறார். இது தாங்கிக்கொள்ள இயலாத வேதனையாகும். குமரி அருகே திருவட்டாறு என்னுமிடத்தில் அலைபேசி (செல்போன்) கோபுரத்தில் ஏறிநின்று மதுவிலக்குக் கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டுமென்றும், மதுக் கடைகளை இழுத்து மூடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த வகையான போராட்ட உத்திகளில் எமக்கு உடன்பாடு இல்லையெனினும் அவரது கொள்கை உறுதி எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பரந்துபட்ட அளவில் பொதுமக்களை இப்போராட்டத்தில் ஈடுபட வைப்பதற்காகவும் அவர் இவ்வுத்தியைக் கையாண்டிருக்கிறார் என்றே உணர முடிகிறது. போராட்டக் களத்திலேயே தான்கொண்ட கொள்கைக்காக தம் உயிரைக் கொடையளித்திருக்கிறார். இவரது உயிர்ப்பலி அரசின் செவிப்பறையைக் கிழிக்கும் என நம்புவோம்.
சசிபெருமாளின் உயிரிழப்புக்குப் பின்னராவது தமிழக அரசு தனது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். வரும் டிசம்பருக்குள் முழுமையான அளவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட தமிழக அரசு முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
கொள்கைக்காக போராட்டக்களத்தில் உயிரிழந்திருக்கிற உண்மைப் போராளி சசிபெருமாளுக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துவதோடு அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவதுடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், மதுவிலக்கை மாநிலக் கொள்கையாக இல்லாமல் தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.