மது ஒழிப்பு போராட்டத்தில் உயிர் துறந்தார் காந்தியவாதி சசிபெருமாள்
ஜூலை.31, 2015:- மார்த்தாண்டம் அருகே, 'டாஸ்மாக்'கை அகற்றக் கோரி, 120 அடி உயரமொபைல் போன் கோபுரத்தில் ஏறிய, காந்தியவாதி சசிபெருமாள்,ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே, உண்ணாமலைக்கடையில், பள்ளி, கல்லுாரி மற்றும் கோவில்கள் நிறைந்த பகுதியில் உள்ள, 'டாஸ்மாக்'கை அகற்றக் கோரி, இப்பகுதி மக்கள், பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, போராட்டக் குழு சார்பில், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த பகுதியில் இருந்து கடையை அகற்ற, 2014 மே 30ம் தேதி, ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஐகோர்ட் உத்தரவையும் மீறி, கடை செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடையை அகற்றக் கோரி, ஜூலை 1ல் நடந்த உண்ணாவிரதத்தில், சசிபெருமாளும் பங்கேற்றார்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், சேலம் மாவட்டம், காட்டூரைச் சேர்ந்த, காந்தியவாதி சசிபெருமாள் மற்றும் உண்ணாமலைக்கடை ஊராட்சி தலைவர் ஜெயசீலன், 48, ஆகியோர், தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, நேற்று காலை 11:00 மணிக்கு, இருவரும் மண்ணெண்ணெய் கேனுடன், அப்பகுதியில் உள்ள, 120 அடி உயர மொபைல் போன் கோபுரத்தில் ஏறினர்.தக்கலை ஏ.எஸ்.பி., விக்ரந்த் பாட்டீல் தலைமையில், ஏராள மான போலீசார் குவிக்கப்பட்டனர்.போராட்டக் குழுவினருடன், போலீசார் பேச்சு நடத்தி, இருவரையும் கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால், இருவரும் மறுத்துவிட்டனர். பிற்பகல் வரை பேச்சு நீண்டது.
வரும் 7ம் தேதி, கடையை அகற்றி விடுவதாக, பிற்பகல் 1:00 மணிக்கு, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இத்தகவலை, போராட்டக் குழுவினர் சசிபெருமாளுக்கு, 'மைக்'கில் தெரிவித்தனர்.
இதை கேட்டு, ஜெயசீலன் கீழே இறங்க துவங்கினார். ஆனால், சசிபெருமாளிடம் எந்த அசைவும் இல்லை. இதனால், தீயணைப்பு வீரர்கள் கயிறுடன் மேலே சென்றனர்; அங்கு, அவர் ரத்த வாந்தி எடுத்து, மயங்கிய நிலையில் இருந்தார்.கயிறு கட்டி அவரை கீழே இறக்கி, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
என் மகன் ஆசை நிறைவேறணும்:சசிபெருமாள் தாயாரின் கடைசி ஆசை:'என் உயிரும், என் மகனின் உயிரும் போனாலும் பரவாயில்லை. தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என, சசிபெருமாளின் தாயார் கூறியுள்ளார்.
சேலம், இளம்பிள்ளையைச் சேர்ந்தவர் சசிபெருமாள். இவரது தந்தை, சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்; தாய் பழனியம்மாள். இவருக்கு, மூன்று மகன்கள், ஒரு மகள். சில மாதங்களுக்கு முன், 90 வயதில் பழனியம்மாள் இறந்தார். இறப்புக்கு முன், சமூக வலைதளம் ஒன்றுக்கு, அவர் பேட்டி அளித்து இருந்தார். அந்தப் பேட்டி, சசிபெருமாள் நேற்று மரணம் அடைந்த பின், பலரால் மறு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன் விவரம்:ஆறாம் வகுப்பு படிக்கும் போதே, என் மகன், மதுவிலக்கு போராட்டத்தை கையில் எடுத்து விட்டான். ஊரை விட்டுச் சென்று, பல இடங்களில் மதுக் கடைகளை மூட, போராட்டங்களை நடத்துவதாகச் சொன்னான்.துவக்கத்தில் பயமாக இருந்தது. 'நமக்கு எதுக்கு, இந்த வேலை' என, கேட்டேன். 'நான் இந்த ஊரில் இருந்தால், உன் மகனாக மட்டுமே இருப்பேன். வெளியில் போனால், பல நல்ல காரியங்களை செய்வேன்' என்றான்.
மதுவால் பல குடும்பங்கள் அழிவதை, கண்கூடாகப் பார்க்கிறேன். அதிலிருந்து, ஏழை, நடுத்தர குடும்பங்கள் விடுபட, சசிபெருமாள் நடத்தும் பட்டினிப் போராட்டம் என்றாவது ஒருநாள் கைகொடுக்கும்.அதில், அவன் உயிர் என்ன, என் உயிர் போனாலும் பரவாயில்லை. தமிழகத்தில், மதுக் கடைகளை மூடவேண்டும் என்பதே, என் ஆசை.சசிபெருமாள் என்ற தனி மனிதனால், இதை சாதிக்க முடியுமா என்று கேட்கின்றனர். அவன் பங்கிற்கு முயற்சிக்கிறான். அவனைப் போல எல்லாரும் சேர்ந்து செயல்பட்டால், மதுவிலக்குசாத்தியமே.இவ்வாறு பேட்டியில், பழனியம்மாள் கூறியிருந்தார்.தற்போது, சசிபெருமாளும் இல்லை; அவரது தாயும் இல்லை.
சேலத்தை சேர்ந்தவர்----:
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே, காட்டூரைச் சேர்ந்தவர் சசிபெருமாள், 60; 6ம் வகுப்பு வரை படித்து உள்ளார். இவரது முதல் மனைவி உயிருடன் இல்லை. இவருக்கு, நவநீதம், 40, விவேக், 37, என இரு மகன்களும் உள்ளனர். சசிபெருமாளுக்கு, மகிழம், 48, என்ற இரண்டாம் மனைவி உள்ளார். இவருக்கு, சுதந்திரதேவி, 11, என்ற மகள் உள்ளார்.நாடி வைத்தியராக வேலை செய்து வந்த சசிபெருமாள், 2008 முதல் 2011 வரை சுதந்திர தேசம் என்ற பெயரில், பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி நடத்தி வந்தார்; தற்போது அப்பள்ளி இல்லை.இளம்பிள்ளை மற்றும் இடங்கணசாலை பகுதியில், மக்களின் அடிப்படை திட்டப்பணிகளை, அரசு முறையாக செயல்படுத்தக் கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளார்.
* கடந்த 2010ம் ஆண்டு, இடங்கணசாலை, முதல் கே.ஆர்.தோப்பூர் வரை உள்ள, 6 கி.மீ., துாரமுள்ள தார்சாலையை சீரமைக்கக் கோரி, ஒரு தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று, தீ குளிக்க முயன்றார். போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்; பின், அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
* கடந்த 2012ம் ஆண்டு, இடங்கணசாலை இ.மேட்டுக்காடு பகுதியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, கூடுதல் கட்டடம் கட்டுவதை தாமதம் செய்வதை கண்டித்து, பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தினார்.
* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரக்கோரி, கடந்த நான்கு ஆண்டுகளாக, பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்.
* 2014ல் நடைபெற்ற, ஆலந்துார் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட சசிபெருமாள், 282 ஓட்டுகள் பெற்றார்.
இறப்புக்கு என்ன காரணம்?
சென்னை அரசு பொது மருத்துவமனை, இதய அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் கணேசன் கூறியாவது:மொபைல் போன் உயர் கோபுரத்தில் ஏறி, ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக, சசி பெருமாள் போராடியுள்ளார். உயரமான இடம் என்பதால், ஆக்சிஜன் அளவு சற்று குறைவாக இருக்கும்; வெயிலும் அதிகம் உள்ள நேரம். இதனால், 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்திருக்கலாம். ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, ஆகாரம் ஏதுமின்றி இருந்தால், இயல்பாகவே சர்க்கரை அளவு வெகுவாக குறையும். சர்க்கரை நோய் பாதிப்பு இருந்திருந்தால், பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.சர்க்கரை அளவு குறைந்தால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி, உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டும்; இறப்புக்கு முன் உடல் உறுப்புகள் செயல் இழக்கும். அப்போது, வயிற்றில் உள்ள பித்தம், நுரையீரலுக்கு வரும் மூச்சுக்குழாயை அடைப்பதால், மாரடைப்பு ஏற்படுகிறது. வயிற்றில் இருந்து வந்த பித்தம், ரத்த வாந்தியாக வெளியேறும். அதுதான், சசி பெருமாள் மரணத்திலும் நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலர் ரவீந்தரநாத் கூறுகையில், ''அவரது போராட்டம் நியாயமானது. போராட்ட நேரம், ஐந்து மணி நேரம் வரை நீடிக்க விடாமல், உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், இறப்பை தடுத்திருக்க முடியும்,'' என்றார்.
'டாஸ்மாக்' பணியாளர் ஆதரவு:
'தமிழகத்தில் அனைத்து, 'டாஸ்மாக்'குகளை உடனடியாக மூட வேண்டும்' என, பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றனர். பல இடங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் கள், பார் உதவியாளர்கள் நலச்சங்க கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது. தலைவர் சிவபிரகாசம், செயலர் ஜான் பிரிட்டோ, பொருளாளர் கோவிந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மதுஒழிப்பு போராளி சசிபெருமாள் ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.பின், 'மதுவை ஒழித்து, ஊழியர்களுக்கு நிரந்தர மாற்றுப் பணி வழங்க வேண்டும். பெருகி வரும் மதுவிலக்கு புரட்சியை, அலட்சியம் செய்யும் அரசை கண்டிப்பது' என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உடல் இன்று பரிசோதனை :
சசிபெருமாள் உடல், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்
கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை, 10:00 மணிக்கு, அவரது உடலுக்கு மருத்துவப் பரிசோதனை நடக்கும். 'அது முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படும்' என, போலீசார் தெரிவித்தனர். சேலத்தில் இருந்து, சசிபெருமாளின் மகன் விவேக், உறவினர்கள் வரவுள்ளனர். பரிசோதனைக்கு பின், அவரது மகனிடம் உடல் ஒப்படைக்கப்படும்.சர்ச்சையில் சிக்கி உள்ள உண்ணாமலைக்கடை மதுக்கடை, நேற்று மதியம் மூடப்பட்டது. 'இந்த கடை இனி திறப்பதற்கு வாய்ப்பு இல்லை' என, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
தலைவர்கள் இரங்கல்:
சசிபெருமாள், மொபைல் போன் டவரில் ஏறி போராட்டம் நடத்துவதற்கு போலீசும், அரசும் எப்படி அனுமதித்தது? போலீசாரோ, அரசு அதிகாரிகளோ அவரோடு பேச்சு நடத்தி, 'டாஸ்மாக்' கடையை மூடுவதற்கு ஒப்புதல் அளித்திருந்தால், அவர் இறந்திருக்கமாட்டார்.
கருணாநிதி
தி.மு.க., தலைவர்
மொபைல் போன் கோபுரத்தின்உச்சியில், ஐந்து மணிநேரமாக அமர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி குரல் கொடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவரை காப்பாற்ற ஆட்சியரோ, போலீஸ் அதிகாரியோ எந்த நடவடிக்கையும் எடுக்க முன் வராதது தான், சசிபெருமாள்
மரணத்துக்கு முக்கியக் காரணம்.
இளங்கோவன்
தமிழக காங்கிரஸ் தலைவர்
கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பகுதியில், ஒரே ஒரு மதுக்கடையை மூடியிருந்தால் கூட, சசிபெருமாளைக் காப்பாற்றியிருக்கலாம்.
ராமதாஸ்
பா.ம.க., நிறுவனர்
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, நீண்ட காலமாக, தனிமனிதனாக போராடி வந்தவர், காந்தியவாதி சசிபெருமாள். 'மதுக்கடையை அகற்றுவதற்கு, அ.தி.மு.க., அரசு உறுதி அளிக்காவிட்டால், என் உயிரை மாய்த்துக் கொள்வேன்' எனக்கூறி, தீவிர போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்; இறந்துள்ளார். பொதுமக்களுக்காக போராடியவரின் உயிரை, இந்த அரசு, துச்சமாக எண்ணியுள்ளது கண்டிக்கத்தக்கது.
விஜயகாந்த்
தே.மு.தி.க., தலைவர்
அந்தப் பகுதியில் உள்ள மதுக்கடைகளை அகற்றக் கோரி, கடந்த மூன்றாண்டுகளாக பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன; ஆனால், மதுக்கடை அகற்றப்படவில்லை. அந்தப் பகுதியில் உள்ள மக்கள், தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்திருந்தனர். சசிபெருமாள் போராட்டம் குறித்து காவல் துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்தும், அவர்கள் இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருந்துள்ளனர்.
தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பா.ஜ., தலைவர்
- சிறப்பு நிருபர் -