சென்னை மக்களுக்கு தமிழக அரசு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
ஜூலை.23, 2015:- சென்னை நகர மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை நகர குடிநீர் நிலவரம் குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
போதிய மழையின்மை காரணமாக, ஏரிகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. ஆந்திரத்திலுள்ள தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், நீர் அளிக்கும் ஏரிகளான சைலம, சோமசீலா, கண்டலேறு ஆகிய ஏரிகளிலும் நீர் இருப்பு குறைவாக இருக்கிறது.
இந்தத் திட்டங்களின் கீழ், நீர் பெற இயலாத நிலை உள்ளது. சராசரியாகப் பெய்து வரும் மழையின் அளவைக் கொண்டு, சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளை நிரப்புவதற்கு அந்த ஏரிகளின் நீர்ப்பரப்பு பகுதிகளில் உள்ள கால்வாய்களைச் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், ஏரிகளில் முழுவதுமாக நீரைப் பெருக்க இயலுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
பொதுமக்களும் குடிநீர்ப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு தாங்கள் பயன்படுத்தும் நீரின் அளவை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். இருப்பிலுள்ள நீர் பொதுமக்களுக்கு சமச்சீரான அளவில் விநியோகம் செய்யப்படும்.
கூடுதலாக நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களைக் கண்டறிந்து அங்கிருந்து பெறப்படும் நீர், சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவைக்காக விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.