தமிழ் மொழி பற்றிக் கூறும் நூல்கள்!
நன்றி: மொழியும் இனமும் - முனைவர் மலையமான்
‘தமிழகம் மக்கள் இனத்தின் தொட்டில்’ என்று செருமானிய அறிஞர் எக்கல் கூறியுள்ளார்.
1913-இல் தமிழ் உலகின் முதன்மொழி என்ற கருத்தை மொழிநூலறிஞர் மாகறல் கார்த்திகேயனார் கூறினார்.
1920-ஆம் ஆண்டளவில் இதே கருத்தை அறிஞர் கா.சுப்பிரமணியனார் மொழிநூல் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் என்ற நூலில் கூறினார்.
1930-40ஆம் ஆண்டுகளில் ஈழத்து நல்லூர் ஞானப்பிரகாச அடிகளார், ‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ என்ற நூலில் இந்த உண்மையை அறிவித்துள்ளார்.
ஞால முதல்மொழி ஒன்றிருந்தது என்று ‘மாரிசு சுவாதசு’- Origin and Development of Language -என்ற நூலில் கூறினார்.இதையே ‘கிரீன் பெர்கு’, ‘மெர்ரிட்ருகுலன்’ ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.
அந்த மூலமொழி தமிழ் என்று தேவநேயப்பாவாணர் தம் ஆய்வு நூலான Primary Classical Language of the World –இல் கூறினார்.
அறிஞர் இளங்குமரனார், மதிவாணன் போன்ற இக்கால ஆய்வாளர் பலரும் தமிழே உலகின் முதன்மொழி என்கின்றனர்.
‘கருணாமிர்த சாகரம்’ என்னும் நூலில் ஆபிரகாம் பண்டிதர், தமிழே உலக மொழிகளின் தாய் என்றார்.
மயோரிகளின் மொழியில் தமிழ்ச்சொற்கள் இருப்பதை மவ்லானாவும், பி.இராமநாதனும் கண்டு கூறினர்.
சுமத்ராவில் காரோபட்கு இனத்தவரின் மொழியில் தமிழ்ச்சொற்கள் உள்ளன.
கொரியா-திராவிடமொழி ஒப்பாய்வு நடத்திய எச்.பி.கூபர் என்பவர் கொரிய மொழியில் தமிழ்ச்சொற்கள் உள்ளன என்று கூறினார்.
தமிழுக்கும் சீனமொழிக்கும் தொடர்புள்ளது என்று மாகறல் கார்த்திகேயனார் கூறியதை கடிகாசலம் நிறுவியுள்ளார்.
சப்பான் நாட்டு ‘கடகானா’ எழுத்துமுறை தமிழிலிருந்து பெறப்பட்டது என்று தி.நா.சுப்பிரமணியம் என்ற ஆய்வாளர் (கலைமகள் இதழில்) தெரிவித்தார்.
சப்பான் மொழியில் 500க்கும் மேல் தமிழ்ச்சொற்கள் இருப்பதைச் சுசுமுஓனோவும் பொற்கோவும் இணைந்தாய்ந்து கூறினர்.
வடமேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கணா நாட்டுக் கணா மொழியில் 27 விழுக்காட்டுச் சொற்கள் தமிழ் என்று ஆய்வாளர் கூறினர்.
அய்ரோப்பாவின் அங்கேரி மொழியில் தமிழ்ச்சொற்கள் இருப்பதை ஆய்ந்து முத்துக்குமாரசாமி ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் எழுதினார்.
கிரேக்க இலத்தீன மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் இருப்பதை ஞானகிரி(நாடார்) நூலாக வெளியிட்டுள்ளார்.
இசுபெயின் நாட்டின் ‘பாசுகு’ மொழி தமிழுடன் ஒற்றுமை உடையதாயிருக்கின்றது. தமிழின் இடப் பெயர்களின் ஈறுகள் பல காணப்படுகின்றன.
அம்மா என்ற சொல் அதே வடிவிலும் திரிந்தும் 50க்கும் மேற்பட்ட மொழிகளில்வழக்கில் உள்ளதாக ப.அருளி ‘பெற்றோரைப் பற்றி’ நூலில் விளக்கினார்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்ட கி.மு. 2000-கி.மு.1200 காலத்திய பிணக்குழிப் பொருள்கள் பாலத்தீனம், சைப்பிரசு, கிரீசு ஆகிய நாடுகளின் பிணக்குழிகளிலும் காணப்பட்டதை கே.கே.பிள்ளை ‘தென்னிந்திய வரலாறு’ என்னும் நூலில் எழுதினார்.
‘ஒரடோட்டசு’ என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் ‘கிரீட்’ தீவில் வாழ்ந்த மக்களைத் ‘தெமிலி’ என்றார். ‘தெமிலி’ என்பது தமிழரைக் குறிக்கும் என்று ந.சி. கந்தையா ஆய்ந்து எழுதினார்.
சிந்துசமவெளியில் கிடைத்த பழந்தமிழ்க் குறிகள் சுமேரியா, கிரீட், ஈசுடர் தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டன.
தென் அமெரிக்காவின் ‘மாயன் நாகரிகம்’ தமிழ்நாகரிகத்துடன் தொடர்புடையது என ந.சஞ்சீவி தெரிவித்தார்.
ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதும் பழந்தமிழே வழங்கியது என்று சுனீத் குமார் சட்டர்சி ‘வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலில் எழுதினார்.
‘ஒரு காலத்தில் வடந்தியா முழுவதும் திராவிட (தமிழ்) மொழி பேசப்பட்டது’ என்று அம்பேத்கர் untouchables என்ற நூலில் எழுதினார்.
தென்னிந்தியாவே திராவிடரின் தமிழரின் வலிமைப்புலமாக இருந்தாலும் மொழியாலும் பிறவற்றாலும் அவர்கள் பலுசித்தானம் முதல் வங்காளம் வரை பரவியிருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்றார் எசு.கே.டே.
குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முன்பு மராத்திய நிலப்பகுதி திராவிடரின் (தமிழரின்) ஆட்சியின் கீழிருந்தது என்று மராத்திய அறிஞர் முனைவர் கட்ர Introduction to Mode Indian Linguistics என்ற நூலில் எழுதினார்.
சிந்தி மொழியில் 2000க்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் உள்ளன என்று ஆய்வறிஞர் பர்சோ கித்வானி கூறினார்.
வங்க மொழியில் பல தமிழ்ச்சொற்கள் இருப்பதைச் சாந்தி நிகேதனத்தின் பேராசிரியர் முத்தையா ஆய்ந்துரைத்தார்.
தொடர் அமைப்பில் வடமொழியும் மற்ற இந்திய மொழிகளும் தமிழை ஒத்துள்ளன என்று சுனீத் குமார் சட்டர்சி கூறினார்.
இந்தி தொடர் அமைப்பைப் பற்றிக் கூறிய அறிஞர் மு.வ., ‘இந்தி ஆரிய உடை அணிந்த தமிழ்ப்பெண்’ என்றார்.
அரப்பா, மொகஞ்சதாரோ மக்களின் மொழி தமிழே என்றார் திருத்தந்தை ஈராசு.