கல்வி உரிமை சட்டத்தில் முரண்பட்ட தகவல்கள் அளித்த அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ்
கல்வி உரிமை சட்டத்தில் முரண்பட்ட தகவல்கள் அளித்த அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி 2014-15 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட இடங்களில் 37.75 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டிருப்பதாக கல்வி பெறும் உரிமைச் சட்ட வள மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த விஷயத்தில் தமிழக அரசு நடத்திய மோசடி நாடகங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி எந்தெந்த மாநிலங்களில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டன என்பது குறித்த விவரங்களை குஜராத் மாநிலம் அகமதாபாத் இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (Indian Institute of Management, Ahmedabad - IIMA) செயல்பட்டு வரும் கல்வி உரிமைச் சட்ட வள மையம் ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
2014-15 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விவரங்களை இந்த மையம் இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் ஒதுக்கப்பட்ட இடங்களில் தில்லி 44.61 விழுக்காடு இடங்களையும், ராஜஸ்தான் 39.26 சதவீத இடங்களையும், தமிழ்நாடு 37.75 சதவீத இடங்களையும் நிரப்பியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
2014-15 ஆம் ஆண்டில் பள்ளி நுழைவு வகுப்பில் மொத்தம் 11 லட்சத்து 61,012 இடங்கள் நிரப்பப்பட்டன. இவற்றில் 5 லட்சத்து 5100 இடங்கள் தனியார் பள்ளிகளை சார்ந்தவை ஆகும். இவற்றில் ஒரு லட்சத்து 30,140 இடங்கள் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி நிரப்பப்பட வேண்டும். ஆனால், 48,740 இடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட்டுள்ளன. இது 37.75 விழுக்காடாகும்.
2014-15 ஆம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி நிரப்பப்பட்ட இடங்கள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரங்களுக்கும், இந்த புள்ளி விவரங்களுக்கும் இடையே ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றன. தமிழக அரசின் சார்பில் இதுவரை மொத்தம் மூன்று காலகட்டங்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை ஆய்வு செய்தாலே தமிழக அரசின் மோசடி அம்பலம் ஆகும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் பெறப்பட்ட தகவலில், 2959 இடங்கள் மட்டும் தான் இந்த சட்டத்தின்படி நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில், தமிழக அரசின் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் சார்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில், தமிழகத்தில் 5314 நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 55,605 இடங்கள் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். இவற்றில் 26,466 இடங்கள், அதாவது 47 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட்டதாகவும், மீதமுள்ள 29,139 இடங்கள் (53 சதவீதம்) நிரப்பப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரிக் பள்ளிகளைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 3673 தனியார் பள்ளிகளில் உள்ள 2 லட்சத்து 42,385 இடங்களில் 61,875 இடங்கள் இலவசமாக ஏழைக் குழந்தைகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். ஆனால், அவற்றில் 64 சதவீதம் மட்டுமே, அதாவது 39,329 இடங்கள் மட்டுமே கல்வி உரிமைச் சட்டப்படி நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 22,546 இடங்கள், அதாவது 36% இடங்கள் நிரப்பப்படவில்லை மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனரகம் தெரிவித்திருக்கிறது.
கல்வி உரிமைச் சட்டப்படி மிகக்குறைந்த எண்ணைக்கையில் தான் தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு குற்றஞ்சாற்றிய போது, தமிழகத்தில் 89,941 மாணவர்கள் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இது மொத்த இடங்களில் 94 சதவீத விழுக்காடு என்றும் பள்ளிக் கல்வித்துறை செயலர் டி.சபிதா தெரிவித்திருந்தார். இந்த புள்ளி விவரங்கள் அனைத்துமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உள்ளன. எந்த புள்ளி விவரமும் மற்றவற்றுடன் ஒத்துப்போகவில்லை. 37.75 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாக கல்வி உரிமைச் சட்ட வளமையம் தெரிவிக்கிறது.
ஆனால், தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தில் 94 சதவீதம் என்றும், இன்னொன்றில் 64 சதவீதம் என்றும், மூன்றாவது ஆதாரத்தில் 47 சதவீதம் என்றும் கூறப்படுகிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரமோ, இவற்றையெல்லாம் விட மிகக்குறைவாக 2959 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பதாக கூறுகிறது.
கல்வி உரிமைச் சட்ட வள மையம் தெரிவிக்கும் தகவல் மட்டும் தான் அதிகாரப்பூர்வமானது; உண்மையானது என்ற நிலையில் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் அனைத்துமே மோசடியானவை என்பதை உணர முடிகிறது.
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் பல ஆண்டுகள் அச்சட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை. இப்போதும் அச்சட்டப்படியான இடங்களில் கட்டணம் செலுத்தும் மாணவர்களை சேர்த்துக் கொண்டு, அந்த இடங்கள் இலவசமாக நிரப்பப்பட்டதாக கணக்கு தான் காட்டப்படுகிறதே தவிர, கல்வி உரிமைச் சட்டம் அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்படவில்லை. எப்போதும் உண்மை ஒன்றாகத் தான் இருக்கும்; பொய்கள் தான் வெவ்வேறாக இருக்கும் என்ற தத்துவத்தின்படி தான் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்படும் தகவல்கள் முழுக்க முழுக்க முரண்பட்டவையாக உள்ளன.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்காததற்கும் இதுவே காரணம் ஆகும். மொத்தத்தில் ஏழைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் தமிழகத்தில் மோசடியால் வீணடிக்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும் போது அனைத்து மாணவர்களுக்கும் சுகமான, சுமையற்ற, விளையாட்டுடன் கூடிய தரமான, கட்டாயக் கல்வி இலவசமாக வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.