தமிழ்நாடு மதுவிலக்கு : விரைவில் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், தமிழக அரசுக்கு...

மதுவிலக்கு : விரைவில் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், தமிழக அரசுக்கு...

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

ஆக.11, 2015:-   தமிழகத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத்
தேர்தலை கருத்தில் கொண்டு, அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும், ஆளாளுக்கு போராட்ட அறிவிப்பு வெளியிட்டு ஆதாயம் தேட முயற்சிப்பதால், இந்த விஷயத்தில், விரைவில் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகள் மூலம், மதுபான சில்லரை விற்பனை, சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் கிடைக்கும் வருவாய், அரசின் இலவச திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில், 'பல குடும்பங்களின் சீரழிவுக்கு, மது காரணமாக இருப்பதால், மது விற்பனையை அரசு கைவிட வேண்டும்' என, சமூக நல அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் வலியுறுத்தி வந்தன.

திடீர் மரணம்:

இந்நிலையில், மதுவிலக்கைவலியுறுத்தியும், டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும், சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்ட

கிராமம் ஒன்றில் போராட்டம் நடத்திய, காந்தியவாதி சசிபெருமாள் திடீரென மரணம் அடைந்தார். இந்த மரணத்தை சாக்காக வைத்து, தற்போது, அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, உதிரி கட்சிகளும், மதுவிலக்கு கோஷத்தை தீவிரப்படுத்தி உள்ளன; அத்துடன், போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
முதல்கட்டமாக, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள், பூரண மதுவிலக்கு கோரி தமிழகம் முழுவதும், 'பந்த்' நடத்தின.

கைதாகி விடுதலை:

இதன்பின், தே.மு.தி.க., சார்பில், கடந்த 6ல், கோயம்பேடு முதல், கோட்டை வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடந்தது. போலீஸ் அனுமதியை மீறி இந்தப் போராட்டம் நடந்ததால், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உட்பட பலர் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.
நேற்று நடந்த, தே.மு.தி.க., செயற்குழு கூட்டத்திலும், பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்றாலும், கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்; நேரத்தை குறைக்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அடுத்ததாக, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, தி.மு.க., சார்பில், தமிழகம் முழுவதும், இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது; சென்னையில் மட்டும், நான்கு இடங்களில் நடக்கிறது.மேலும், தி.மு.க., மகளிரணி சார்பில், காஞ்சிபுரத்தில், வரும் 22ல், பூரண மதுவிலக்கு மாநாடு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


உண்ணாவிரதம்:

தமிழக,பா.ஜ.,வும், மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அடுத்ததாக, தமிழக காங்கிரஸ் சார்பில், வரும் 14ல், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. நீண்ட காலமாக மதுவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும், பா.ம.க.,வும், தற்போது, இது தொடர்பாக பிரசார இயக்கங்களை நடத்தி வருகிறது. இதுதவிர, உதிரி கட்சிகள் சிலவும், மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளன.

இப்படி, ஒவ்வொரு கட்சியும் ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு, போராட்டங்கள் நடத்தினாலும், சில இடங்களில், டாஸ்மாக் கடைகள் மீது வன்முறை தாக்குதல் நடந்தபோதிலும், மதுபான விற்பனை குறைந்தபாடில்லை.

முறியடிக்க வேண்டும்:

அதேநேரத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு, ஆளாளுக்கு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு ஆதாயம் தேட முயற்சிப்பதால், இந்த விவகாரத்தில், அதிரடியாக ஏதாவது முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், மாநில அரசுக்கு உருவாகி உள்ளது. அப்போது தான், எதிர்க்கட்சிகளின் ஆதாயம் தேடும் முயற்சி முறியடிக்கப்படுவதோடு, பெண்கள் மத்தியில், அ.தி.மு.க.,வுக்கு உள்ள செல்வாக்கும் தொடர்ந்து நீடிக்கும் என்பது, அரசியல் ஆய்வாளர்களின் கருத்து. எனவே, விரைவில் தமிழக அரசு இதுதொடர்பாக, சில அறிவிப்புகளை வெளியிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்